குறிப்பு-1
வாசக நண்பர்கள் இப்பிரதிக்கு நான் வழங்கி இருக்கும் இரு தலைப்புக்களையோ அல்லது ஒரு தலைப்பையோ ஏற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு-2
சரித்திர நாவல், சரித்திர சிறுகதை என்றெலாம் படித்த அனுபவத்தில் சரித்திர கவிதை எழுதினால் என்ன? என்ற ஆசையின் விளைவு இப்பிரதி. 28.10.2006 அன்று பலத்த மழை பெய்ந்துக் கொண்டிருந்த அன்றிரவு. அமரர் கவிஞர் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் எனும் கவிதைத் தொகுதி கைவசம் இல்லாத நிலையில், கனவுகள், கற்பனைகள், காகிதங்களுடன் பேனாவும் என்னுள்ளும் என் அருகேயும் விழித்துக் கொண்டிருந்த அன்றைய இரவில்தான் இப்பிரதி தோற்றம் பெற்றது.
குறிப்பு-3
வாசக நண்பர்கள் இப்பிரதியை கவிதை என்றோ, சரித்திர கவிதை என்றோ, விரும்பினால், தங்களுக்கு விருப்பமான ஏதோ ஒரு பெயர் கொண்டோ, அவரவர் வாசிப்பு அரசிலுக்கேற்ப வாசித்து கொள்ளலாம். எனக்கு ஆட்சேபம் இல்லை.( இதனை நான் அடக்கத்துடன்தான் சொல்லுகிறேன். அலட்சியத்தோடு சொல்லவில்லை). ஒரு நீண்ட சரித்திர கவிதைக்கான ஆரம்ப சுருக்க குறிப்புக்களின் தொகுப்பாக இப்பிரதி
எனக்குள் தோன்றி இருக்கிறது என்பது மட்டும் என் மனம் நம்புகிறது.
கருவறையும் கல்லறையும்
அல்லது
இல்லாது போகும் வாழ்வு
1948-1956
1-9 வரையிலான
அத்தியாயங்களின் சுருக்கம்.
சுதந்திரமாய்
பிறக்க, வாழ
கருவறை கொண்ட
தாயின் பிறப்பு.
தாய்களின் வாழ்வை
சாகடிக்க
தந்தையர்களின் படையெடுப்பு.
1957-1976
10-29 வரையிலான
அத்தியாயங்களின் சுருக்கம்.
மரணத்தின் பிறப்பிற்கான
புணர்ச்சியை துவக்கு என
தந்தையர்களுக்கு
பின்னணி அதிகாரங்கள் கட்டளையிட,
தாய்களின் வாழ்வுகளுக்கான
இறப்பு தொடங்க,
விடுதலை-
கன்(GUN) விழித்தது.
1977-1983
30-36 வரையிலான
அத்தியாயங்களின் சுருக்கம்
தந்தையர்கள் விதைத்த
விதைகள்
மரணமாய் கரு கொள்ள,
தாய்களின் வாழ்வு
உரு சிதைந்தது.
1984-2006
37-59 வரையிலான
அத்தியாயங்களின் சுருக்கம்.
மரணம் பிறந்து விட்டது.
வாழ்வு மரணித்து விட்டது.
2007-
60வது
அத்தியாயத்தின் சுருக்கம்.
மரணம் வாழ்வதற்கும்
வாழ்வு மரணிப்பதற்கும்
இல்லாது போனது
வாழ்வு.
அனுபந்தம்-
தாய் நாடு
பேய் வீடானது!
தந்தையர்கள்-
சுடுகாட்டின்
காவலாளிகளாய்
பதவி பிரமாணம்
செய்து கொண்டார்கள்!

online slots