Thursday, November 23, 2006

உம்மா சுட்ட ரொட்டியும் ஐ.நா.சபையும்

உம்மா ரொட்டிச் சுட்டா
சும்மா சொல்லக் கூடாது
அது தனி ருசிதான்!
உம்மா சுட்ட ரொட்டியை
சாப்பிட்டவன் எவனும்
சுகமாய் தூங்கலாம்.

உம்மா ரொட்டி சுடும்
அண்டைக்கு எங்க வூட்டுல
பெரிய சண்டைதான்
யாருக்கு-அதிக ரொட்டிகள் என்று!
பிற்குறிப்பு;
உம்மா சுட்ட ரொட்டிக்கும்
ஐ.நா.சபைக்கும் என்ன சம்பந்தம்?
அமெரிக்காவுக்கும் நியாயத்திற்கும் என்ன சம்பந்தமோ?
அந்த சம்பந்தம்தான்!

Sunday, November 19, 2006

அடிக்கப் போ!


எதிரி ஒருவன்
உன்-
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தைக் காட்டு
சொன்னார்கள் சரிதான்!
மூன்றாவது அடிக்கு
என்ன செய்வது?
மீண்டும்-
கன்னதைதையே தேர்ந்தெடு!
எதிரியின் கன்னத்தை
அவனை நீ அடிக்க!

Tuesday, November 14, 2006

ஒரு கேள்விசவப்பெட்டி விற்பவனின்


காலைப் பிரார்த்தனை


ஒருவரின் மரணமென்றால்


அவனை-

கொலைக்காரன் என்பதா?
Saturday, November 11, 2006

என் கடவுளுக்கு.......நன்றிகள்!!!

SHINY SHAZக்கு

Fickr.com வழியாக கண்கள் தந்ததற்கு!

Thursday, November 09, 2006

புனைவெனும் நீர்


''முதலாளித்துவ வர்க்கமும், பெரும் ஏகாத்தியபத்தியமும்,சமூகத்தையும்,மக்கள் கூட்டத்தையும் சமையல் அறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் சாமான்களை வைக்க முயல்வது போல், கட்டம் கட்டிப் பெயர் சூட்டி மனிதனை மனிதனாக்குகிற அவனுடைய சுய மரியாதையையும், கனவுகளையும், அவனிடமிருந்து பிடுங்குவதோடு மட்டுமல்லாமல்,இந்தக் கிண்ணத்தில் இதுதான் வைக்கப்பட வேண்டும் என்பதை போல் இந்தக் கூட்டத்திற்கு இத்தகைய சுயமரியாதையையும் இத்தகைய கனவுகள் மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது என்று வரம்புகளை உருவாக்கியுள்ளன.'' -ராமாநுஜம்- ''சுய மரியாதை ஒரு தொற்று நோய்'' எனும் கட்டுரையில்
'நிழல்' -செப்டம்பர்-அக்டோபர்-2005
1
புனைவெனும் நீரால்
கழுவப்படுகிறது மூளை;
2
காட்சிப் படிமங்களில்;
ஓலிப் பேழைகளில்;
கொட்டை எழுத்துக்களில்;
தெருவோரச் சுவர்களில்;
விதவிதமான தொனிகளை
உற்பத்திச் செய்யும்
புனைவெனும் நீரால்
கழுப்படுகிறது மூளை;
3
அசுத்தம் நிறைந்த
கழிவறைப் போல்
புனைவெனும் நீர்
அதிவேகமாக வீசப்பட்டு
சுத்தமாகவே சுத்தமாகும் மூளை;
4
பாய்ச்சப்படும் நீரால்
தன்னியக்கச் சலவை இயந்திரமாய்
உலகின் சக்கரங்கள்
சுழல...சுழல
மூளைகளின் சலவை;
5
உனக்குத் தெரியுமா?
நவீன கருப்பை கிழித்து
பாயும் இரத்தமிது.
6
புனைவெனும் நீரில்
நனைந்த உடம்பில்
இப்போ-
மிருகத் தோலின் வளர்ச்சி;
7
வர்ணப் பேதம் பார்க்காது
தேச வர்த்தமானங்களைக் கடந்து
சமத்துவம் பேணும்
நீர் இது;
8
புனைவெனும் இந்த நீர்
யாருக்கும்
கானல் ஆகா நீர்;.
9
தொடர்ச்சியாய் உருவாகிய
நூற்றாண்டு குழாய் வழியில்
வெடித்த வெடிப்பில்
பாய்ந்தது இந்த
புனைவெனும் நீர்;
10
நீரோ-
அரூபம்
இந்த புனைவு நீரோ
அரூபவத்திற்கும்
ரூபம் தரும்
நுட்பம்;
''இனியும் நடைமுறை வரலாற்றுக் காலத்தில்
வாழும் மனித இனத்திடம், பிரத்யேகமான
அமைப்பின் திறமைகள் இருக்கிறது என்று
சொல்வதற்கான, கண்ணிற்கு
புலப்படும் அறிகுறிகள் தென்படவில்லை''
அக்காதெமி வெளியீடாக வந்த பஞ்சாபி
எழுத்தாளர் நரேந்திரபால் சிங்கின்
''ஓரு புதிய கதை''எனும் நாவலிருந்து;
தமிழாக்கம்; கே. பாலசந்திரன்-

11
அடுக்களையில் தவறாது
அழுக்கான பாத்திரங்கள்
நீர் நனைவது போல்-
தினசரி தவறாது
புனைவெனும் நீரால்
நனையும் மனித மூளைகள்;
12
குறியீடுகள்
சமிக்ஞைகள்
பார்த்தார்களா?
எப்படியெலாம்
உரு மாறுகிறது
இந்த புனைவெனும் நீர்;
13
புனைவெனும் நீரால்
சலவைச் செய்யப்பட்ட மூளைகள்-
உண்மைகளை காட்டுவது போல்
பொய்களை நிஜமாகும்.;
14
வில்லனை கதாநாயகனாக்கும்
கதாநாயகனை வில்லனாக்கும்;
எதிரியை நண்பணாக்கும்;
நண்பனை எதிரியாக்கும்
அபூர்வ மந்திர கோல்
புனைவெனும் நீர்;

15
புனைவெனும் நீர்-
வெறிவூட்டும் மதுவாகும்
ந்த க்ஷணத்தில்தான்
சொந்த மகளையே தாயாக்கும்;

16
அநியாயக்காரனை
நீதி காக்கும்
நீதிபதியாய்
பிம்பம் காட்டும்
புனைவெனும் நீர்;

17
நீரிலோ-
சுவாசம் முட்டும்
இந்த புனைவெனும் நீராலோ
உலகமே முட்டிக் கொள்ளும்;

18
வழுக்கையிலும்-
மயிர் வளர்க்கும்
இந்த புளைவு நீர்;

19
பொய்யின் கருவறையான
புனைவெனும் இந்த நீர்-
மெய்யின் தாய் உடம்பாய்
வேஷம் தரிக்கும்;

20
வெறும் வெளியில்
அரசு அமைக்கும்
நீரிது;

.......இது அரசியல், பொருளாதாரம்,உற்பத்தி முறை,போர்
அச்சுறுத்தல், என்ற கண்ணூக்குப் புலப்படும்
முறைகளிலும்; பண்பாட்டு அழிப்புகள் இனக்குழு
அழிப்புகள், சிந்தனை முறைகளை
மையப்படுத்தல் என்ற கண்ணூக்குப்
புலப்படாத முறைகளிலும் மனிதக் குழுக்கு
எதிரான பயங்கரத்தைச் செய்து வருகிறது..........
தீராநதி ஆகஸட் -2005 இதழில் ரமேஷ்-பிரேம் வழங்கிய பேட்டியில் உலகமயதல் பற்றிய ஓரு கேள்விக்கான பதிலில்;
21
மயக்க வண்டியில்
பயணம் செய்ய வைத்து
சிதைவு ஊருக்குப் போக
வழிச் சமைக்கும்;
22
அதிகாரத்திற்கு பக்கத் துணையாகி
குளிர் ஊட்டும்
இந்த நீரின் ஈரம்;
23
விடுதலை எனும் நீரோட்டத்தின்
தடைக்கல்யார்த் தெரியுமா?
சாட்சாத்தான்
இந்ந புனைவெனும் நீரே!
24
அடிமைத்தனத்தின் மீது
கவிழ்ந்நுக் கிடக்கும்
பெரும் நீர்ச்சுமை;
25
திட்டமிட்டே கொட்டப்படும்
இந்த புனைவெனும் நீர்
வன்முறைக்கான ஆயுதமாகும்;
26
சத்யத்தின் மேக கூட்டமாய்
இந்த நீர்சூல் கொண்டால் மட்டுமே
சமாதான மழையாகும்;
27
சலவைச் செய்யப்பட்ட
துணிமணிகள்
கொடியில் காய்வது போல்
புனைவெனும் நீரால்
கழுவப்பட்ட மூளைகளின்
சரீரங்கள்
வன்முறையில் கொடியில்
பிணங்களாய் தொங்கும்;
28
எல்லா பசிகளையும்
எல்லா தாகங்களையும்
கிளரச் செய்யும்
இரசாயன நீர் இது;
29
யதார்த்தத்தை அழித்து
மாயைகளை
எழுதிச் செல்லும்
நீர் எழுத்து;
30
இந்த புனைவெனும் நீர்
பனிப் போர்;
31
இந்த புனைவெனும்
நீரில் மூழ்கிக் கிடக்கிறது
உலக உருண்டை;
நன்றி-மல்லிகை-ஜனவரி-2006
41வது ஆண்டு மலர்